News

கடந்த 2 வருடங்களில் 35000 பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள்

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிலுள்ள சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது கொழும்பை சுற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை, பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம், துறைமுக நகரம், மத்திய வங்கி, நாடாளுமன்றம் மற்றும் தாமரை கோபுரம் உட்பட கல்விக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் (Saman Ekanayake) வழிகாட்டலின் கீழ் இலங்கை நாடாளுமன்றம், கல்வி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகளின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றம், கல்வி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து செயற்படுத்தப்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக இவ்வளவு அதிகமான மாணவர்கள் குழுவிற்கு இந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்தததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் களப்பயணத்தின் போது, ​​இலங்கையின் ஜனநாயக வரலாற்றின் பல்வேறு மைல்கற்கள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அறிக்கைகள் மற்றும் விசேடமான நினைவுச் சின்னங்கள் போன்றவற்றைப் பார்வையிட மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அத்துடன் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க (Sagala Ratnayaka) ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

கொழும்பில் இருந்து தொலைதூர கஷ்டமான பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் 160க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் களப்பயணத்தில் இணைந்துள்ளதுடன் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அநேக பாடசாலைகளின் மாணவர் நாடாளுமன்றம் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற அமர்வுகள் ஜனாதிபதி அலுவலக பழைய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டன.

மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் நோக்குடன் அரச நிர்வாக பொறிமுறை தொடர்பாக மாணவர்களை தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) மற்றும் அமைச்சர்கள், இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) மற்றும் நாடாளுமன்ற உத்தியோகஸ்தர்கள் ஆகியோரும் இவற்றில் பங்கேற்றனர்.

ஜனநாயக கட்டமைப்பு, நாடாளுமன்றம் மற்றும் பிரஜைகள் இடையிலான தொடர்பு, நிர்வாகம் மற்றும் வகிபாகம் போன்ற தலைப்புகளின் கீழ் மாணவர்களுக்கு தெளிவூட்டும் விரிவுரைகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button