முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான அதிசொகுசு வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நான்கு இலட்சம் ரூபா அபராதம் செலுத்தமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பௌசி, 2010 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக செயற்பட்டார்.
இதன்போது அமைச்சின் செயற்பாடுகளுக்கு நெதர்லாந்தில் இருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் வழங்கப்பட்டது.
எனினும் பௌசி, குறித்த வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 இலட்சம் ரூபா பணம் செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவர் சட்டத்தரணிகள் ஊடாக ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.