News

மைத்திரிக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் (Sasi Mahendran) முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​பிரதிவாதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தனது கட்சிக்காரருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக சேவையாற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததையடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி அவர் தொடர்ந்தும் தலைவராக செயற்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றினை அவமதிப்பு செய்யவில்லை எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

அப்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன, நீதிமன்றில் கோரிக்கை விடுத்து, இந்த மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்தும் திகதியினை கோரினார்.

அதன்படி, மனுவை பரிசீலிக்க இம்மாதம் 27ஆம் திகதிக்கு அழைப்பு விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டேகு சரத்சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.

இவ்வாறான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button