News

வடக்கு ரயில் சேவை தொடர்பில் விசேட அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் மார்க்க பகுதி நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் காரணமாக தேர்தல் கடமைகளுக்காக வரும் உத்தியோகத்தர்களுக்கும் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் மீண்டும் திறக்கப்பட்டது.

அதன்படி கடந்த 19, 20, 21, 22 ஆகிய தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை பல விசேட ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த மார்க்கத்தில் வழமையாக ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் மார்க்கத்தின் சமிக்சை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்குக் காரணம் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மஹவயில் இருந்து அனுராதபுரம் வரை 47 ரயில்வே கடவைகள் உள்ளதுடன், 15 ரயில்வே கடவைகள் பிரதான வீதிகளுக்கு குறுக்கே அமைந்துள்ளன. அவற்றில் 09 ரயில்வே கடவைகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உள்ள பிரதான வீதிகளை கடக்கின்றன.

பிரதான வீதிகளின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கடவுப்பாதைகளில் ரயில் அந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கினால் பாதுகாப்பு கடவைகளை இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய ரயில்வே கடவைகளுக்கு எச்சரிக்கை பலகைகளை நிறுவ வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக ரயில்வே சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான 22 தினசரி ரயில் சேவைகளையும் முன்னெடுக்க முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சமிக்சை அமைப்பு நவீனமயப்படுத்தி  மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button