கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் அதிகளவான வேட்பாளர்கள்
இலங்கையின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 8,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் 786 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 716 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 70 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 ஆசனங்களுக்காக 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் வாக்குகள் மூலமும் 29 பேர் தேசிய பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்த முறை பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் இரண்டாவதாக கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 902 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை பொதுத் தேர்தலில் அதிக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களைக் கொண்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்கு 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொனராகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்கு 135 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்கு 120 பேரும் போட்டியிடுகின்றனர். இரண்டு மாவட்டங்களிலும் தலா 15 கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மொனராகலை மற்றும் பொலனறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலேயே குறைந்தளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.