அவசர அவசரமாக மகிந்த வெளியிட்ட அறிவிப்பு!
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவல் அல்ல என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 06 உத்தியோகபூர்வ வாகனங்களில் 03 வாகனங்களை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த விடயத்தை ஜனாதிபதி செயலகமும் அறிவித்துள்ளதாக மகிந்தவின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அரச புலனாய்வுப் பிரிவினரால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் படி, இலங்கையிலேயே அதிக அச்சுறுத்தல் கொண்ட அரசியல் வாதி என்ற பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக குறித்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.