நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு…!
நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால், உப்பு உற்பத்தி தடைபட்டுள்ளதால் தேவைக்கு ஏற்றவாறு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புத்தளம் (Puttalam), பாலாவி மற்றும் அம்பாந்தோட்டை (Hambantota) ஆகிய உப்பள்ளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தாண்டு, கடந்த சில மாதங்களாக அப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், உப்பு உற்பத்திக்கு தேவையான அளவு சூரிய வெளிச்சம் கிடைக்காமையினால் உப்பு உற்பத்தி தடைபட்டுள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை தொடருமானால் போதியளவு உப்பை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என பாலாவி உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரணசிங்க பண்டார (Ranasinghe Bandara) தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், இந்நாட்டின் வருடாந்த உப்பின் நுகர்வு 125,000 முதல் 150,000 மெற்றிக் தொன் வரை உள்ளது, இதில் பெரும்பாலானவை புத்தளம் பாலாவிவிற்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் மட்டுமே எதிர்பார்த்த உப்பு அறுவடை செய்ய முடிந்தது.
மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பத்தாயிரம் மெற்றிக் தொன் உப்பு வேதமடைந்துள்ளது.
இதுவரை ஓரளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதிக மழை பெய்து வருவதால் விளைச்சலை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோசமான வானிலை மற்றும் நிர்வாக குறைபாடுகள் காரணமாக ஹம்பாந்தோட்டை உப்பள்ளத்தில் ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் உப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.