ரயில்களில் ஏற்படும் தொழிநுட்ப கோளாறுக்கான காரணம் வௌியானது!
ரயில்வே திணைக்களத்தில் போதிய ரயில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததே ரயில்களின் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் போன்று நேற்று (28) மற்றும் இன்று (29) ஆகிய நாட்களில் பல ரயில்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது தொடர்பாக “அத தெரண” மேற்கொண்ட விசாரணையில், ரயில் தொழில்நுட்ப வல்லுனர்களின் வெற்றிடங்கள் தொடர்பாக பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்தார்.
ஆனால் தற்போதுள்ள அரசாங்கங்கள் தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே தொழிநுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை நீடித்தால் அடுத்த ஆண்டுக்குள் ரயில் சேவையை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என ரயில்வே துணைப் பொது மேலாளர் தெரிவித்தார்.
எனவே, தொழில்நுட்ப வல்லுனர்களை விரைவில் பணியமர்த்துமாறு தற்போதைய அரசாங்கத்திற்கு அறிவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று காலை ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கரையோரப் பாதை மற்றும் களனிவெளி ரயில் பாதைகளில் தாமதம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், ரயில் சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டு வழமையாக இயங்குவதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.