12 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு அறிவிப்பு!
இலங்கையில் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அருகிலுள்ள MOH அலுவலகங்களில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சு (Ministry Of Health) தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களை இலக்காக கொண்டு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமூக ஆலோசகர் வைத்தியர் அதுல லியனபத்திரன (Dr. Liyanapathirana) தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முறையான தடுப்பூசிகள் போடப்பட்ட 9 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தட்டம்மை தடுப்பூசிக்கு இன்னும் தகுதி பெறாத ஒன்பது மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அதிக ஆபத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், கடந்த வருடம் மே மாதம் முதல் 1,100 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் இந்த அவசர தடுப்பூசி செலுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.