News

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை : முன்னெடுக்கப்பட்டுள்ள அவசர கூட்டம்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டமெொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டமானது நேற்று (26) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் அவரது செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு பரீட்சார்த்தியும் பாதிக்கப்படவில்லை எனவும், பரீட்சார்த்திகளுக்கு தேவையான வாகன வசதிகள் ஒவ்வொரு மாவட்டச் செயலகத்தாலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, வடக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு மாவட்டச் செயலர்கள் மூலம் எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக நானாட்டான் பிரதேசத்தில் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், வெள்ள அபாயமுள்ள பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் அங்கு தங்கியிருந்து பரீட்சைக்கு தோற்றுவதற்குரிய ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

மாந்தை கிழக்கில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளதுடன் கௌதாரிமுனையிலிருந்து பூநகரி மத்திய கல்லூரிக்கு பரீட்சைக்கு தோற்றும் ஆறு பேருக்கு வாகன ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டதாக அந்த மாவட்டச் செயலார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடற்றொழிலாளர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கையை வழங்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியனவற்றின் எந்தவொரு வீதிகளும் இதுவரை தடைப்படவில்லை என திணைக்களப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கையில், நெடுந்தீவிலிருந்து பரீட்சை விடைத்தாள்களை கொண்டு வருவதற்கும், வினாத்தாள்களை கொண்டு செல்வதற்கும் இப்போது கடற்படையினரின் உதவியே பெறப்படுவதாகவும், கடலில் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப் படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இடர்நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு சகல தரப்பினருக்கும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button