17 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் இலங்கை வருகை.!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவிலிருந்தே (India) அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 357,279 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, ரஷ்யா(Russia), ஜேர்மனி (Germany), பிரித்தானியா (UK), அவுஸ்திரேலியா (Australia), சீனா (China) மற்றும் பிரான்ஸ் (France)ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நவம்பர் மாதத்தின் முதலாம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையான காலப்பகுதியில் 156,174 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வந்ததுடன் அந்த எண்ணிக்கை 34,306 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யா, ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.