News

ஃபெங்கல்’ புயலுக்கு நடந்தது என்ன?

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த ‘ஃபெங்கல்’ புயல் 27ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டது.

இதன் தாக்கத்தால் இலங்கையின் பெய்த கடும் மழையால் பெருவாரியான பகுதிகள் வௌ்ளக்காடாக மாறியிருந்தன.

இந்நிலையில், குறித்த புயல் தமிழக நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தமிழக கரையை கடக்கத் தொடங்கிய ‘ஃபெங்கல்’ புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து ‘ஃபெங்கல்’ புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் ‘ஃபெங்கல்’ புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத மழைப்பதிவாக அது பதிவானது. அதன்பின்னர், நேற்று காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவிழக்கும் என்றும் நாளை வடக்கு கேரளா- கர்நாடகா கடற்கரையில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 சென்றிமீற்றர் மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போச்சம்பள்ளியில் 25 சென்றிமீற்றர் மழையும், திருவண்ணாமலையில் 22.2 சென்றிமீற்றர் மழையும் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு (12 முதல் 20 சென்றிமீற்றர்) வாய்ப்புள்ளதால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button