யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ், கொழும்பு தொடருந்து சேவையை கல்கிசை வரை தொடர்ந்து வழங்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து சேவை யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பு வரையான சேவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி தொடருந்து தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் தேதி வரை தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு (Colombo) புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்தானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தை வந்தடைந்து.
பின்னர் காங்கேசன்துறையிலிருந்து (KKS) மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் தொடருந்து இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தை சென்றடைகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் தொடருந்து கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது.
இருப்பினும் கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே இன்றைய தினம் அதிகளவாக பயணம் செய்யும் பயணிகள் கொழும்பின் புறநகர் பகுதிகளான வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கல்கிசை ஆகிய பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
தொடர்ச்சியான சேவையினை கல்கிசை வரை வழங்குவதன் ஊடாகவே தம்மால் இலகுவாக பயணம் செய்ய முடியும் எனவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.