புதிய விரிவுரையாளர்களை இணைக்க அனுமதி
பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு ( University Grants Commission) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் (Harini Amarasuriya) கலந்துரையாடிய பின்னர் இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார்.
தற்போது வெற்றிடமாகவுள்ள விரிவுரையாளர்களில் 50 வீதமானவர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் (Mahapola Scholarship) கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கவனம் செலுத்தியுள்ளார்.
தற்போதைக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.
முன்னைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் குறித்த கொடுப்பனவு 7 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவர் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.