News

அரச நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள்! ஜனாதிபதியின் உத்தரவு

வெளிநாட்டு அரசுகள், சர்வதேச அமைப்புகள், இலங்கைக்குள் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பு கொள்ளும்போது,  இலங்கையின் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் 12 பக்க சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலாளர் நந்திக்க குமநாயக்க, அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த சுற்றறிக்கை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. எனினும், இந்த விதிகளில் நிதி அமைச்சகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிதியமைச்சு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பலதரப்பு மற்றும் பிராந்திய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பேச்சுவார்த்தை நடத்துதல், இருதரப்பு ஒத்துழைப்பு உதவியைச் செயலாக்குதல், வெளிப்புற வணிகக் கடன்கள், வெளிப்புறக் கடன் தொடர்பான விடயங்கள் மற்றும் முன்கூட்டியே பரிமாற்ற வளங்களை நிர்வகித்தல் போன்ற பல அம்சங்களில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை பேணமுடியும்.

இந்தநிலையில், இலங்கை அரசின் பல்வேறு அமைப்புகளுக்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இராஜதந்திர பிரதிநிதித்துவங்களுக்கும் இடையிலான முறையான மற்றும் செயல்பாட்டு தொடர்புகளை நெறிப்படுத்தவும் முறைப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.

இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது நிறுவனங்களுக்கும் இடையிலான அனைத்து தகவல் தொடர்புகளும் வெளியுறவு அமைச்சகம் வழியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகள், நகராட்சி மன்றங்கள் உட்பட, வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது இலங்கைக்குள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்கள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தவோ அல்லது நேரடியாக தொடர்பு கொள்ளவோ கூடாது.

அமைச்சர்கள், தூதர்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களின் மூத்த அதிகாரிகளைச் சந்திக்கும் போது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறையை இந்த சுற்றறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அங்கீகரிக்கப்படாத அல்லது இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தாத அரசுகள்  அல்லது அரசாங்கங்களுடன் ஈடுபாடு கொள்வதை தடுக்கிறது.

அதேநேரம், வெளியுறவு அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் வெளியுறவுக் கொள்கை மற்றும் உறவுகள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்து எந்தவொரு வகையான ஊடக அறிக்கைகளையும் குறிப்பாக நேர்காணல், சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல்ஃமின்னணு ஊடகங்களில் வெளியிடுவதையும் இந்த சுற்றறிக்கை தடை செய்கிறது.

எழக்கூடிய எந்தவொரு தேவையற்ற இருதரப்பு மற்றும் பலதரப்பு முரண்களை தடுப்பதற்கும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு நிலையான அணுகுமுறையை நெறிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த சுற்றறிக்கையில், வெளிநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் மற்றும் மூத்த அலுவலகங்கள், இராஜதந்திர விழாக்களில் கலந்துகொள்வது, இராஜதந்திரப் பணிகளுக்கான அழைப்புகள், இலங்கையில் சர்வதேச அல்லது பிராந்திய மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களுடனான சந்திப்புகள் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இதற்கான வீசா அனுமதிகள், வெளிநாட்டு அமைச்சின் ஊடாக கோரப்படவேண்டும்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, வீசா உதவிக்கான கோரிக்கையை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக்கான இலங்கைத் தூதரகம் மூலம் உத்தியோகபூர்வ பயணத்திற்கான விசாவைப் பெற வேண்டுமானால், அத்தகைய கோரிக்கையை பயணத் திகதிக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்னதாகச் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button