News

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு யோசனை: நிதியமைச்சகத்துக்கு அதிக தொகை

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு யோசனையின்படி, அரசாங்க செலவினங்கள் 4,616 பில்லியன் ரூபாய்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வழமையைபோன்றே பாதுகாப்புத்துறைக்கு அதிக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த யோசனையை முன்னதாக கடந்த வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய ஒதுக்கீடு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மேற்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் வரும் இந்த அமைச்சகத்துக்கு 713 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

மேலும், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 442 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, 2024 ஆம் ஆண்டில் அந்த அமைச்சகத்துக்கு 423 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒதுக்கீடு முப்படைகள், இலங்கை கடலோர காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறைக்கு ஏற்படும் செலவுகளை உள்ளடக்கியது. வானிலை ஆய்வுத் துறையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகிறது.

ஒன்பது மாகாண சபைகளுக்கும் 536 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது,

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்துக்கு 507 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்துக்கு 496 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு 473 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்துக்கு 271 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,

மேலும், விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்துக்கு 209 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒதுக்கீட்டு யோசனையின் இரண்டாவது வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறும், அதைத் தொடர்ந்து பெப்ரவரி 18 முதல் 25 வரை விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்டமூலத்தின் குழு நிலை விவாதம் அல்லது மூன்றாவது வாசிப்பு 2025 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் 21 ஆம் திகதியன்று யோசனை மீதான இறுதி வாக்கெடுப்பு வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button