இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி : வெளியான தகவல்
இலங்கையிலிருந்து சீன (China) சந்தைக்கு கோழி இறைச்சிப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உள்ளூர் கோழிப்பண்ணை தொழிலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அண்மைய சீன விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட 15 ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று.
இலங்கை தனது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்துறையின் உப தயாரிப்பான கோழி தலைகள் மற்றும் கால்களை நேரடியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் பொருளாதாரம் மற்றும் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்க உதவும்” என தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக, சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நெறிமுறையில் கைச்சாத்திடுவதற்கு விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.