அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி!
புதிய அரசாங்கம், அடுத்த மாதம் தனது முதல் பாதீட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
திறைசேரி அதிகாரிகளின் கூற்றுப்படி, மாதத்திற்கு 7,500 ரூபாய் வரை சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறு தற்போதைய நிதி நிலைமைக்குள் இருப்பதாகவும், எனினும் இதனை விட அதிக அதிகரிப்பு என்பது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) எடுக்கின்ற முடிவைப் பொறுத்ததாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படாததால், இந்த உயர்வு பரிசீலிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பெப்ரவரி 17 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பாதீட்டில் ஓய்வூதியதாரர்களுக்கான அதிகரிப்பு சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதீட்டின் ஊடாக, ஏற்றுமதி வளர்ச்சிக்கு கிராமப்புற துறையின் பங்களிப்புகளை ஈர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது.
இதேவேளை வாகன இறக்குமதி வரிகள் மூலம் அரசாங்கம் 450 பில்லியன் வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு நிதியுதவி திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பின் கீழ் இந்த பாதீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.