சிறிலங்கா எயார்லைன்ஸ் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தமையும் அவர் அதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சர் பிமல் தெரிவித்ததாவது, “சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் மூன்று வருடங்களாக இயந்திரம் இல்லாமல் தரையிலேயே இருந்தன.
ரணிலின் அரசாங்கம், மூன்று வருடங்களும் மாதத்திற்கு ஒன்பது லட்சம் டொலர்கள் செலுத்திக் கொண்டு அந்த விமானங்களை தரையிலேயே வைத்திருந்தது.
எனக்கு தெரிந்தவரையில் தற்போது, கனேகொட உள்ளிட்ட புதிய தலைவர்கள், நிதியை திறட்டி தரையில் இருந்த விமானங்களில் ஒன்று இயக்கப்படுகிறது, மற்றைய இரண்டும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இயக்க உள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யாமல் முன்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.”என்றார்.