அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்குவதாக மேற்கொள்ளப்படும் மோசடி

அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகள் காணப்படுவதாக போலியாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டு நபர்களின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க இலட்சினையை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் சாருக் தமுனுபொல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அன்மையான நாட்களில் இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க இலச்சினையை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெற்று வருவதாக அண்மையில் இலங்கை மத்திய வங்கியும் அறிவித்திருந்தது.
தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக தெரிவித்து போலியாக உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்ரீ லங்கன் விமான சேவையை நிறுவனத்தின் இலச்சினையை பயன்படுத்தியும் இவ்வாறு போலி வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போலியாக இவ்வாறு அரச இலச்சினைகள், அரசாங்க நிறுவனங்களின் இலச்சினைகள் பயன்படுத்தி தகவல்களை திரட்டுவது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நபர்கள் தேசிய அடையாள அட்டையின் பிரதிகள், கடவுச்சீட்டின் பிரதிகள், பிறப்புச் சான்றிதழின் பிரதிகள் போன்ற தனிப்பட்ட தரவுகளை திரட்டுவதாகவும் இவ்வாறு திரட்டப்படும் தரவுகளைக் கொண்டு மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.