News

நூறுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

அரசியல் காரணங்களுக்காக அன்றி நீண்ட காலமாக காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படாமையாலேயே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே புத்திக மனதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”சில காலங்களாகவே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது. மூன்று வருடங்களாக இடமாற்றம் செய்யப்படவில்லை.

இதில் எந்தவொரு அரசியல் காரணங்களும் இல்லை. நாங்கள் சில அதிகாரிகளை சாதாரண பணிகளுக்கு நியமித்துள்ளோம். சில அதிகாரிகளுக்கு நல்ல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் இருப்பதாக யாரும் சொல்ல முடியாது.

இந்த இடமாற்றங்களின் செயல்திறனை ஒரு வருடத்திற்கு நாங்கள் கண்காணிப்போம். பொறுப்பதிகாரிகள் அங்கே சும்மா உட்கார முடியாது. வேலை செய்ய வேண்டும்.

இந்த இடமாற்றங்கள் குறித்து காவல்துறை ஆணைக்குழுவும் (National Police Commission) எங்களிடம் பலமுறை கேட்டதற்கமைய அவர்களின் ஒப்புதலுடன் இது செய்யப்பட்டது.” என தெரிவித்தார்.

இதேவேளை சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான காவல்துறைஅதிகாரிகள் குழு நேற்று (11) இரவு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட 139 காவல்துறை அதிகாரிகளில் 104 பிரதான காவல்துறை பரிசோதகர்களும், 35 காவல்துறை பரிசோதகர்களும் அடங்குகின்றனர். இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இருந்து நடைமுறைக்கு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, காவல்துறை பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய 51 அதிகாரிகள் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் தலைமையக காவல்துறை பரிசோதகர்களாக பணியாற்றிய அதிகாரிகளும் சாதாரண பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button