வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
சுமார் 5 ஆண்டுகளாகத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலாம் திகதி முதல் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் மகிழுந்துகள் மற்றும் வேன்கள், பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தாத பிற பொருட்களை இறக்குமதி செய்ய அதிவிசேட வர்த்தமானி மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தடை நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இது “மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும்” மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.