வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இலங்கை வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்யுமாறும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவிக்கையில், “வாகனங்களுடன் இலங்கைக்கு வரும் முதலாவது கப்பல் பெப்ரவரி 13ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானிய வங்கிகள் இலங்கை வங்கிகளின் கடனுதவி கடிதங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்ற வதந்திகளில் உண்மையில்லை.
கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகளாலும், அப்போதைய அரசாங்கத்தின் தலையீட்டினால் கடன் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் வாகன இறக்குமதியில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
ஆனால் தற்போது அந்த பிரச்சினைகளை தீர்க்கும் நிலைக்கு வந்துள்ளோம். இதன்படி, கடன் கடிதங்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான 90 வீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
வாகனங்களின் இறக்குமதி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
வாடிக்கையாளர்கள் ஜப்பான், ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து வாகனங்களை வாங்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.