சஜித் அணிக்குள் உச்சம் தொட்ட முரண்பாடு : நிறுத்தப்பட்டது பேச்சு

ஐக்கிய மக்கள் சக்திக்குள் (sjb)வெடித்துள்ள உள் வீட்டு நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான(unp) கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் அண்மையில் தொடங்கின.அதன்படி, பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அந்த பேச்சு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் இருந்து தங்கள் கட்சி இன்னும் விலகவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும்(Tissa Attanayake) சமீபத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
தனது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக இந்த பேச்சில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.