கையை கைவிட்டு கதிரையில் களமிறங்கும் கட்சி – அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட சிறீலங்கா சுதந்திரக் கட்சி ( Sri Lanka Freedom Party (SLFP) முடிவு செய்துள்ளது.
நேற்று (20) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலில் தமது கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ( Sri Lanka Freedom Party (SLFP) பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேர்தல்கள் ஆணைக்குழு இன்னமும் தேர்தல் வர்த்தமானியை வெளியிடவில்லை.
நாம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கதிரை சின்னத்தில் போட்டியிடுவோம். அதற்கு தயாராக உள்ளோம்.
வேட்புமனுக்கள் எப்போது தாக்கல் செய்யப்படும், எந்த திகதியில் நடைபெறும் என்பதற்காக எங்கள் வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
விரைவில் வெளியிடப்படும் என்று நம்புகிறோம். வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் அவர்களின் வெற்றிக்காகவே என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டது போலவே, உள்ளூராட்சித் தேர்தலிலும் ஓரளவுக்கு மக்களை ஏமாற்றும் வகையில் வரவு செலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.