பிரித்தானியாவுக்கான விசாவில் புதிய கட்டுப்பாடுகள்!
பிரித்தானியாவின் புதிய விசா விதிகளின் படி, பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி முதல் வெளிநாட்டிலிருந்து பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க விரும்பும் நிறுவனங்கள், தமது முதல் தேர்வாக பிரித்தானியாவில் உள்ளவர்களை நியமிக்க முயற்சிக்க வேண்டும்.
புதிய விசா விதிகளின் படி, வெளிநாட்டு பணியாளர்களை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கு உள்நாட்டு பணியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
‘Skilled Worker visa’ எனப்படும் திறன் வாய்ந்த தொழிலாளர் விசாவிற்கான குறைந்தபட்ச ஊதியம் £23,200-லிருந்து £25,000-ஆக அதிகரிக்கபட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டு தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதை பிரித்தானிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
அத்துடன், ‘short term student visa’ எனப்படும் குறுகிய கால மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வி பயிலும் நோக்கம் மட்டுமே கொண்ட மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் முறைகேடுகள் அதிகரித்து வருவதால் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டுப்பாடுகளால் மொத்தமாக, 42 சதவீத விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.