இலங்கை காற்றாலைத் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் அதானி நிறுவனம்

இந்திய அதானியின் இலங்கை காற்றாலைத் திட்டம் இன்னும் உயிருடன் உள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கௌதம் அதானி தலைமையிலான நிறுவனம், திட்டத்திலிருந்து வெளியேற விருப்பம் வெளியிட்ட போதும், பேச்சுவார்த்தைகளுக்கு, அந்த நிறுவனம் தயாராகவே உள்ளதாக இலங்கை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுக்களை தொடங்குவதற்காக, நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட மா அதிபரின் அனுமதிக்காக எரிசக்தி அமைச்சகம் காத்திருக்கிறது.
நீதிமன்ற அனுமதி கிடைக்கும் வரை, இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதானியின் இந்த திட்டத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்படும் மின்சார அலகுகளுக்கான கட்டணங்களே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை, அடுத்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரும்போது, அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால் இது குறித்து விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் இந்தியா மற்றும் இலங்கை தரப்புகள், மோடியின் நிகழ்ச்சி நிரலில், இந்த திட்டம் குறித்த கலந்துரையாடல் இல்லை என்று கூறியுள்ளன.