தேசபந்து தொடர்பில் நீதிமன்றம் சற்று முன்னர் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் தேசபந்து தலைமறைவாகி இருந்த காலப்பகுதியில் உதவிய அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் பயன்படுத்திய அனைத்து இலத்திரனியல் உபகரணங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனோடு தேசபந்து தென்னக்கோனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாத்தறை சிறை அத்தியட்சகருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைக் கைதிகளை அழைத்து வரும் சிறைச்சாலை திணைக்கள வாகனத்தில் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுடைய வழக்கு விசாரணையோடு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகின்ற சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தற்போது மாத்தறை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (20) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில், விளக்கமறியல் உத்தரவையடுத்து நேற்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை மீதான முடிவு இன்று அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாத்தறை வெலிகமவில் பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொலை செய்யச் சதி செய்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 27 ஆம் திகதி அவரைக் கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், குறித்த உத்தரவுக்கு முன்னதாக, நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதியான, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், தலைமறைவாகி சரணடைந்துள்ள தென்னக்கோனுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர், ஒரு ஆடம்பர பென்ஸ் சிற்றூந்தில் நீதிமன்ற வளாகத்திற்குள் அமர்ந்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைப் பெற்ற பின்னரே, தாம் இந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக முடிவு செய்தாக திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர், ஒரு ரகசிய பூனை போல நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். சட்டத்துறைக்கு அறிவிக்காமல் பிணை பெற முடியும் என்று நம்புகிறார் தாம் நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட, அவர் ஒரு இருக்கையில் முறையாக உடையணிந்து அமர்ந்திருந்தார்.
குற்றவாளியான அவர் எவ்வாறு இருக்கையில் அமர்ந்திருக்கமுடியும். அவர் தடுப்பில் அல்லவா இருக்கவேண்டும் என்று திலீப பீரிஸ் வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.