புதிய அரசின் பட்ஜட்டை ஆதரித்த எதிரணி எம்.பி.!

அநுர அரசின் வரவுசெலவுத் திட்டத்தை எதிரணி எம்.பி ஆதரித்துள்ள சம்பவம் நேற்று(21) நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கே .காதர் மஸ்தான்(Kader Masthan )என்பவரே வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தவராவார்.
நேற்று(21) மாலை நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பின் போது பட்ஜட்டுக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன.இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் அரசாங்கம் 114 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியது.
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கருத்து தெரிவிக்கையில்,
“இது அரசாங்கத்தின் பட்ஜெட். மக்கள் அவர்களை ஆட்சியில் அமர்த்தினார்கள். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். நானும் நம் நாட்டு மக்களின் கருத்து மற்றும் விருப்பத்துடன் செயல்படுகிறேன். அதனால்தான் ஆதரவாக வாக்களித்தேன்.”
“மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அரசு செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவதை விட, மக்களுக்கு நமது ஆதரவை வழங்குவது நல்லது.” என்றார்.