டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு : அமைச்சர் அறிவிப்பு

நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வலியுறுத்தினார்.
கொழும்பில் (Colombo) உள்ள லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,“தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்கி, பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதாகும்.
ஒன்றரை மில்லியன் சுகாதாரப் பணியாளர்களின் தகவல்கள் உட்பட மனித வளங்களை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முழு கவனம் செலுத்துவதன் மூலம் அதை டிஜிட்டல் மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நோய்வாய்ப்படும் குடிமக்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பு சேவையை, வழங்குவது சுகாதார நிபுணர்களின் பொறுப்பு, இதற்காக, சுகாதார அமைச்சு அதன் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் தேவையான தொழில் சார்ந்த திறனை வழங்குவதுடன் நோயாளிக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பை வழங்கும் சூழலை உருவாக்கும்.
நாட்டின் சிறந்த பொறியியல் மற்றும் கட்டிடக்கலை திறன்களைப் பயன்படுத்தி, நாட்டின் அரச வைத்தியசாலைகளை ஆக்கப்பூர்வமான மற்றும் கவர்ச்சிகரமான இடங்களாக மாற்றுவதில் தற்போதைய அரசாங்கத்தின் முழு கவனம் உள்ளது.” என தெரிவித்தார்.