இலங்கையின் அபிவிருத்திக்குக் கைகொடுக்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் ஜனாதிபதி அநுரகுமார ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அதன் போது எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய மின்சாரம், சுற்றுலாத்துறை, கமத்தொழில் மற்றும் பிராந்திய அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், உலக வங்கி குழுமத்தின் இந்த ஆதரவு இலங்கை மக்களுக்கான முதலீடாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் முன்னேற்றத்தை கட்டியெழுப்ப இப்போதே செயல்படுவதன் முக்கியத்துவத்தை உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா எடுத்துரைத்துள்ளார்.