மக்களின் வாகன கனவு : மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியீடு

கடந்த வாரத்திலிருந்து வாகனங்களுக்கான நிதியளிப்பு கடன்களை நாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்பை மாற்றி மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை இந்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, முச்சக்கர வண்டிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின்படி, குறைந்த முன்பணத்துடன் வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்பதால், மக்கள் குறித்த வசதிகளைப் பெற முயல்கின்றனர் என்றும் அந்தந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
ஜூலை 17 அன்று மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து புத்தம் புதிய கார்கள், SUVகள் மற்றும் வான்களுக்கும் 50 முதல் 60 சதவீதம் வரை குத்தகை(Leasing) அல்லது நிதியுதவி(Finance) போன்ற நிதி வசதிகளைப் பெற முடியும்.
முச்சக்கர வண்டிகளுக்கு வாகனத்தின் மதிப்பில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும், பிற வாகனங்களுக்கு 70 சதவீதம் வரையிலும் குத்தகை பெறலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், மின்சார வாகனங்களுக்கு வாகனத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை குத்தகை அல்லது நிதி பெறும் வாய்ப்பு மாற்றப்பட்டுள்ளது.