டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பில் வெளியான தகவல்

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது போல, கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொருத்தமான உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவி்த்தார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மத்திய வங்கி ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் நேற்று (1) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மையப்படுத்தி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் குறிப்பாக நமது நாட்டில் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகளுக்கு பெரும்பாலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த காலங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
Online Banking, QR Code ஆகியவற்றை பயன்படுத்தி செலுத்தி வந்த நிலையில், தற்போது அரசாங்கத்தின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை GovPay ஊடாகவும் செலுத்த முடிகிறது.
இதே முறையில் வரி செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதன் பயன்பாடு மிகக் குறைவு. குறிப்பாக மேல் மாகாணத்திற்கு வெளியே செல்லும்போது, பெரும்பாலானவர்கள் இன்னும் நாணயத்தாள்களை கொண்டே பரிவர்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதைத்தான் அவர்கள் எளிது என நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் உண்மையிலேயே யோசித்துப் பார்த்தால், ஒரு வர்த்தகர் மற்றும் நுகர்வோருக்கு, இந்தப் பணத்தைப் பயன்படுத்துவது உண்மையில் கூடுதல் நேரத்தை கடத்துகிறது.
குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வங்கி அமைப்பு மற்றும் நிதி நிறுவனங்கள் சிறப்புப் பங்காற்றுகின்றன. இது போன்ற இடங்களுக்கு வந்து அதை ஊக்குவிப்பதைத் தவிர, இது கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.
அப்போதுதான் இதில் நம்பிக்கை ஏற்படும். இதன் மூலமாக வரி பிரச்சினையில் சிக்கிக்கொள்வோம் என்ற தேவையற்ற பயம் உள்ளது. அப்படி எதுவும் இல்லை. வரி பிரச்சினையில் சிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படுமானால் பணத்தை எவ்வாறு கையாண்டாலும் அதில் சிக்கிக் கொள்வீர்கள்” என தெரிவித்துள்ளார்.