வனிந்து மற்றும் பினுரவுக்கு அபராதம்!
லங்கா பிரீமியர் லீக் ஒழுங்கு விதிகளை மீறிய கண்டி
பெல்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்க LPL ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி வனிந்துவுக்கு போட்டி பணத்தில் 25 சதவீதமும், பினுரவுக்கு போட்டி பணத்தில் 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் அணிகளின் வீரர்களின் ஒழுக்கம் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தும் வகையில் LPL போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இதன்படி, வீரர்களின் ஆடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கண்டி
பெல்கன்ஸ் அணி அல்லாத தலைக்கவசம் அணிந்திருந்தமைக்காக தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு போட்டி கட்டணத்தில் 25 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3600 அமெரிக்க டொலர்களான குறித்த அபராதத் தொகை சுமார் 11 இலட்சம் இலங்கை ரூபாவாகும்.
மேலும், இதே சட்டத்தை மீறியதற்காக கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கும் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
ஜூலை 2ஆம் திகதி கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் ஆலோசனைகளை அவர் மீறியதே இதற்குக் காரணமாகும்.
மேலும், போட்டிகள் நடைபெறும் நாட்களில் போட்டிகள் முடியும் வரை மைதானத்திற்குள் வீரர்கள் செருப்பு அணிந்து செல்ல எல்பிஎல் போட்டி ஏற்பாட்டாளர்கள் தடை விதித்துள்ளனர்.