News

பல மில்லியன் ரூபாய் வருமானத்தை இழக்கும் இலங்கை போக்குவரத்துச்சபை

இலங்கை போக்குவரத்துச் சபையின் 12 பிராந்தியங்களில் ஊவா மற்றும் ருஹுனு பகுதிகளுக்கு சொந்தமான டிப்போக்களில் அதிகளவு திருட்டு மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் நடத்துனர்கள் பயணச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டு நாளாந்தம் ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை சபைக்கு இல்லாமல் செய்து வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பேருந்துகளில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு இதனையடுத்து நாளாந்த வருமானம் பல இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய்க்கு பற்றுச்சீட்டு கொடுக்காமல் பல நடத்துனர்கள் பயணிகளிடம் பணம் வசூலிப்பதாகவும் இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதுடன் பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் எடுக்கும் நடத்துனர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லலித் டி அல்விஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 12 டிப்போக்களில் 06 டிப்போக்கள் வருமானத்தை இழந்து சம்பளம் வழங்க முடியாத நிலையில் உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் ருஹுண பிராந்திய முகாமையாளர் பிரபாத் குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button