இலங்கை வீதிகளில் ஓடப்போகும் சீனாவின் மின்சார பேருந்துகள்
இலங்கையில்(sri lanka) உள்ள பயணிகள் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்களுக்கு எரிபொருள் பாவனை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் புதிய நானோ தொழில்நுட்பத்தின் படி தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளை வழங்க சீனாவின் GREE பேருந்து உற்பத்தி நிறுவனம் தயாராக இருப்பதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.
சீன(china) நிறுவன அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பத்தரமுல்ல பிரதான காரியாலயத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவிப்பதற்காக அண்மையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த செயற்பாடு சீன பேருந்து நிறுவனத்தின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர் முதலில் மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட, சீனாவில் உள்ள GREE நிறுவனத்தின் பொது மேலாளர் சூசன் லின் கூறியதாவது,
“இந்த நாட்டில் பேருந்து வழித்தடங்களையும் நிறுத்தங்களையும் நாங்கள் பார்த்தோம். இதனால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் புரிந்து கொண்டோம். பேருந்துகள் வெளியிடும் காபனின் அளவு அதிகமாக இருப்பதும் உணரப்பட்டது. மலிவு விலையில் குறைந்த பராமரிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பேருந்துகளை இந்த நாட்டிற்கு வழங்க நாங்கள் நம்புகிறோம். அவை காபன் வெளியேற்றத்தை 30% வரை குறைக்கின்றன.
மின்கலத்தை மின் ஏற்றி நல்ல கவனம் செலுத்தி சேவையை வழங்குகிறோம். அதைப் பற்றி சிறப்பு அறிவைக் கொண்ட பயிற்சி பெற்ற ஊழியர்களை நாங்கள் கொண்டுள்ளோம். ஓடும் பேருந்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மின் ஏற்றப்பட்ட மின்கலத்தை உடனடியாக மீட்க முடியும்.
பேருந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை ஓடர் செய்து பெறுவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றை இலங்கை முகவர் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும். கிடைக்கும் இடங்களை இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளின் விற்பனைக்குப் பின் சேவை எங்கள் நிறுவனத்தால் சிறப்பாக வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சீனாவின் GREE பேருந்து உற்பத்தி நிறுவனம், மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் ஏனைய மாகாண போக்குவரத்து அதிகாரசபை அலுவலகங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.