புதிதாக வழங்கப்படும் இடைக்கால உதவித்தொகை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையான 3,000 ரூபாவுடன் ஒக்டோபர் மாதம் ஓய்வூதியம் 6,000 ரூபாவாக வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்பிறகு, நவம்பர் மாதம் முதல் இதுவரை கிடைத்த ரூ.2,500 உதவித்தொகையுடன், புதிதாக வழங்கப்படும் இடைக்கால உதவித்தொகையான ரூ.3,000 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மேலதிக கொடுப்பனவான 3,000 ரூபாவை வழங்குவதற்கு நிதி அமைச்சும் முழுமையான எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளதால், அரச நிர்வாக அமைச்சு இதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டெம்பர் மாதம் அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ஒக்டோபர் மாதம் இடைக்கால கொடுப்பனவாக 3,000 ரூபாவும், செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையான 3,000 ரூபாவுடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் 6,000 ரூபா நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்தார்.