News

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardana) தெரிவித்துள்ளார்.

மல்வத்து மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நல்லாசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்கிய பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மேற்கொண்ட தீர்மானத்தை நிராகரித்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரண்டு வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது சரியான பாதையில் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

இந்த வெற்றியை மேலும் பாதுகாப்பதற்கும் முன்னெடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இப்போதே உள்ளூராட்சி முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்த்து வருகின்றனர்.

இதனால் அடுத்த தேர்தலில் வேட்புமனு கிடைக்காமல் போய்விடுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தலுக்கு நாம் இடமளிக்க மாட்டோம். புதிய அரசியல் சக்தியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதற்காக, எனது முழு ஒத்துழைப்பையும் ஆசிகளையும் வழங்குகின்றேன்” என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button