News

குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கு SLS சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை என்பதால், சில நிறுவனங்கள்  TFM மதிப்பில் குழந்தை சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.

இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான சவர்க்கார பொதியில் இலங்கை தரநிலைப் பணியகம் SLS சான்றிதழ் அச்சிடப்பட்டதாகவும், 78 எனப் பொதியில் TFM மதிப்பாக மோசடியான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஜூலை 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நிறுவனம் தவறை ஒப்புக்கொண்டிருந்தது.

குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தினை கொள்வனவு செய்து பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகார சபை அண்மையில் ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், இலங்கை தர நிர்ணய பணியகத்திடம் இருந்து SLS சான்றிதழ் பெற்ற சவர்க்காரங்களின் பட்டியலைப் பெற்று, அந்த சவர்க்காரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் TFM மதிப்பு உள்ளதா என்பதை சரிபார்க்க நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

சுமார் ஏழு விதமான சவர்க்கார வகைகள் இருப்பதாகவும்,.வீடுகள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான சவர்க்காரங்கள் கொழும்பில் உள்ள மொத்த மற்றும் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன், அதன் TFM மதிப்பு தொடர்பான கடுமையான சிக்கல்கள் இருக்கலாம் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை வாங்கும் போது மிக அவதானமாக செயற்படுமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button