விவசாயிகளுக்கு சஜித் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி!
கமநல சேவை மத்திய நிலையங்களின் ஊடாக இரசாயன மருந்துகள் மற்றும் திரவ உரங்களை நியாயமான விலைக்கு வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தங்கல்ல நகரில் நேற்று(28) இடம்பெற்ற வெற்றிப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நட்பு வட்டார செல்வந்தர்களின் கடன்களை இரத்து செய்தாலும் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய முடியாமல் போய் உள்ளது.
விவசாயிகளை இலக்காகக் கொண்டு நீர்ப்பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா தொற்று நாட்டின் வங்கரோத்து நிலைமை என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
தரமான 50 கிலோ கிராம் உர மூடையொன்றை 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு, கருப்புச்சந்தை வர்த்தகத்தை நிறுத்தி கமநல சேவை மத்திய நிலையங்களின் ஊடாக இரசாயன மருந்துகள் மற்றும் திரவ உரங்களையும் நியாயமான விலைக்கு வழங்குவோம்.
QR CODE முறையூடாக கடற்தொழிலார்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை போக்குவரத்து பேருந்து உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்குவோம்.நெல்லுக்கான நிர்ணய விலையையும் பெற்றுத் தருவோம்.
அரசாங்கத்தினால் அவர்களின் செல்வந்த நண்பர்களின் கோடிக்கணக்கான கடன் தொகையை இரத்து செய்ய முடிந்த போதும், விவசாயிகளின் கடன்களை இரத்துச் செய்ய முடியாமல் போயிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த கடன்களை இரத்து செய்வோம்” என்றார்.