கனேடிய மாகாணமொன்றில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!
கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளின் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள தவணை முதல் இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் ஜில் டன்லொப் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவது தடை செய்யப்படுவது தொடர்பில் பெற்றோரையும் மாணவர்களையும் தெளிவூட்டி வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலர் வகுப்பு முதல் தரம் ஆறு வரையிலான மாணவர்கள் தங்களது வகுப்பறை கற்றல் நடவடிக்கைகளின் போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் விசேட சந்தர்ப்பங்களில் அனுமதியுடன் மட்டுமே கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தரம் ஏழு முதல் 12 வரையிலான வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை வளாகத்திற்குள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த முடியும் என்ற போதிலும் வகுப்பறை நேரங்களில் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகளில் காணப்படும் கலாச்சார மாற்றங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜில்டன் ஆப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.