ரணிலின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிதி அமைச்சு
முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்த கருத்துக்கு நிதி அமைச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன இன்று (4) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜூலை 8 தரவுகளை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளேன்.
அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டால், கூடுதல் செலவுக்கு 14,000 கோடி ரூபாய் தேவைப்படும்.
அதை இருபதாயிரமாக உயர்த்தினால் கூடுதலாக 28,000 கோடி ரூபாய் தேவைப்படும்.
பத்தாயிரம் ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் VAT வரியை குறைந்தது 21% ஆக அதிகரிக்க வேண்டும்” என்றார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான (2024 Sri Lanka elections) தபால் மூல வாக்களிப்பு முன்னதாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு (PAFFREL) கேள்வியெழுப்பியுள்ளது.