தனிநபர் வருமான வரி கட்டமைப்பை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் 2025 ஏப்ரல் மாதம் முதல் திருத்தங்களைச் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடலைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரிக் கட்டமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களானது அமைச்சரவைப் பத்திரம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே வரி அறிவிடுவது கையாளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ரூபா 150,000 வருமானம் பெறும் நபரிடம் அறவிடப்பட்ட வரி 14% இனாலும் ரூபா 200,000 வருமானம் பெறும் நபரிடம் அறவிடப்பட்ட வரி 20% இனால் குறைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ரூபா 300,000 வருமானம் பெறும் நபரிடம் அறவிடப்பட்ட வரி 25% இனாலும் குறைக்கப்படுவதோடு, இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீர்செய்தலின் ஊடாக இந்நாட்டின் மொத்த வருமானத்தில் ஏற்படும் தாக்கம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 0.07% என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கருத்தில் கொண்டு இந்த நிவாரணம் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.