News

ஊரடங்கு சட்டம் நீடிப்பு – அனுமதியின்றி நடமாடும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என காவல்துறை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு காவல் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும் போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர் தங்களது நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அல்லது கடிதத்தை ஊரடங்கு கால பிரவேச ஆவணமாக பயன்படுத்த முடியும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button