News

மன்னார் காற்றாலை திட்டம் மீள்பரிசீலனை

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இது தொடர்பான மனுக்கள் இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த மனுக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போது, ​​அமைச்சரவை செயலாளர் மற்றும் எரிசக்தி அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, இந்த மாதம் 7 ஆம் திகதி உத்தேச காற்றாலை மின் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் மனுக்களில் உள்ளவற்றை கருத்தில் கொண்டு, உரிய திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்து, அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

தற்போதைய இடைக்கால அமைச்சரவையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இது குறித்து எடுக்கப்படும் தீர்மானத்தை அறிவிப்பதற்காக திகதியை வழங்குமாறு கோரினார்.

அதுவரை திட்டத்தின் தற்போதைய நிலை அப்படியே தொடரும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு வாய்மொழியாக அறிவித்தார்.

இந்த விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள், அந்தந்த மனுக்களில் பிரதிவாதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் உத்தேச அமைச்சரவை உறுப்பினர்களை பிரதிவாதிகளாக நியமித்து மனுவில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்க அவதானிப்புகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button