இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
அம்பாந்தோட்டை (Hambantota) பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் (Power Ministry) சீனாவின் சினொபெக் (Sinopec) நிறுவனத்திற்கும் இடையே இன்று (16) காலை குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடாக இது கருதப்படுகிறது.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்றான சினொபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில், 200,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமையவுள்ளதோடு, இதில் பெரும்பாலான பகுதியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இலங்கையில் சீனாவின் இந்த பாரிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, ஹம்பாந்தோட்டை பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும்.
குறித்த திட்டத்தின் நன்மைகள் விரைவில் முழு இலங்கை மக்களுக்கும் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜென்ஹோன்க், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியார் கலந்துகொண்டனர்.