ரணில் – சஜித் இணையும் கூட்டணி : கிடைத்தது அனுமதி
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (16) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்காக தமது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த குழு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe), ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு (Local Government Election) முன்னதாக சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் தமக்குள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.