மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவை: ஜனாதிபதியின் அறிவிப்பு

மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிக்கவும், மூடப்பட்ட வீதிகளை மீண்டும் திறக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் போரின் போது அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. சில வீதிகள்; மூடப்பட்டன. சில தனியார் நிலங்கள் வனத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில், பொது மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் குடியேறவும், சுதந்திரமாக விவசாயம் செய்யவும் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தமது அரசாங்கம் தீர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.