News

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தகவல் | How To Local Government Election Results Announce

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறும் அதே வாக்களிப்பு நிலையங்களில், வாக்கு எண்ணிக்கை பணிகளும் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் நடைபெறுவதால், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் பல தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நிலையங்களின் தூரம் மற்றும் அமைவிடத்தைப் பொறுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு தொகுதிக்குள் ஒரே ஒரு வாக்களிப்பு நிலையம் இருந்தால், அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்கு எண்ணிக்கை கட்டாயம் நடைபெறும். முடிவுகள் அந்த இடத்திலேயே பிரகடனப்படுத்தப்படும்.

மற்றொரு முறையும் உள்ளது. ஒரு தொகுதிக்குள் பல வாக்களிப்பு நிலையங்கள் இருந்தால், சில இடங்களில் வாக்களிப்பு நிலையங்களிலே வாக்கு எண்ணப்படும். வாக்கு எண்ணப்பட்டு, முடிவு அறிக்கை மட்டும் அந்த தொகுதியில் உள்ள முடிவு பிரகடன மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும்.

மற்றொரு முறையாக, தொகுதிக்குள் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் மாலை 4 மணிக்குப் பிறகு முடிவு வெளியிடும் மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும். அவை தனித்தனியாக எண்ணப்பட்டு, அந்த மத்திய நிலையத்தில் தொகுதியின் முடிவு தயாரிக்கப்படும்.

இதற்காக ஒரு சிறப்பு அதிகாரியை நாங்கள் நியமித்துள்ளோம், அவர் தொகுதிவாரி தேர்தல் பொறுப்பு அதிகாரி என அழைக்கப்படுவார். அவருக்கு இதற்கு முழு பொறுப்பு உள்ளது.

அதேபோல், வாக்கு எண்ணிக்கை மத்திய நிலையத்தின் முழு பொறுப்பு பிரதான வாக்களிப்பு மத்திய நிலைய பொறுப்பதிகாரியிடம் உள்ளது. தொகுதியின் முடிவு வெளியிடும் மத்திய நிலையத்தில், அந்த தொகுதியின் இறுதி முடிவு வெளியிடப்படும்.

அங்கு, அந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு பெயரிடப்படும். இது அந்த வாக்களிப்பு மத்திய நிலையத்திலேயே நடைபெறும்.

பின்னர், அங்கு இருப்பவர்கள் அறிந்து கொள்ள ஒரு நகல் காட்சிப்படுத்தப்படும். அதன் பின்னர், வலய தெரிவத்தாட்சி அதிகாரி மூல நகலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு கொண்டு செல்வார்.

நாங்கள் மாவட்டங்களில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் முடிவு தயாரிக்கும் மத்திய நிலையங்களை அமைத்துள்ளோம். அங்கு அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த முடிவு தயாரிக்கப்படும்.

அங்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அதேபோல், விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒவ்வொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிற்கு கிடைக்க வேண்டிய உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படும்.

இதன் மூலம் உள்ளூராட்சி மன்றத்தின் இறுதி முடிவு தயாராகும். அந்த முடிவு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படும். தேர்தல் ஆணைக்குழு அனுமதித்த பின்னரே மாவட்டத்தில் இருந்து அந்த உள்ளூராட்சி மன்றத்தின் முடிவு பிரகடனப்படுத்தப்படும்.

அதே நேரம், ஊடகங்களுக்கும் அந்த முடிவு வெளியிடப்படும். நாங்கள் முதல் வாக்கு முடிவை இரவு 11 மணிக்கு முன்பாக வெளியிட எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button