வங்கக்கடலில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே, வங்காள விரிகுடாவில் பதிவான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் இன்று (29) அதிகாலை பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து தீபானி வீரகோன் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்த நிலையில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இலங்கையில் அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் இருந்தபோதிலும், இலங்கை மக்கள் இது தொடர்பாக தேவையற்ற பயத்திற்கு ஆளாக வேண்டாம் என தீபானி வீரகோன் அறிவுறுத்தினார்.
தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் (Andaman and Nicobar) தீவுகளுக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில் 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கிலோ மீற்றர் ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித சேதமோ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 22 ஆம் திகதி டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.